Monday, 22 August 2016

வரலாற்றில் இன்று - தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை 1639-ம் ஆண்டு இதேநாளில் தான் உருவானது. கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன், செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினர்.

அந்த இடத்தை விற்ற வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகியோர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ஜார்ஜ் டவுன் மற்றும் பார்க் டவுன் ஆகிய பகுதிகளே பூர்வீகமான ஒரிஜினல் சென்னை ஆகும். தமிழக மக்கள் அப்பகுதியை "டவுன்" என்றும் "பட்டணம்" என்றும் அழைத்தனர்.. இன்று அப்பகுதி வட சென்னை என்று அறியப்படுகிறது. ஆங்கிலேயர்கள் இம்மாநகரை மெட்ராஸ் என்று அழைத்தனர். மெட்ராஸ் மாநகரத்தின் பெயர் 1996–ம் ஆண்டு சென்னை என மாற்றம் செய்யப்பட்டது.

காலக் கிராமத்தில் இதர பகுதிகள் ஒவ்வொன்றாக சென்னை நகருடன் இணையப்பெற்றன. இன்று சென்னை மாநகரம் புகழ்பெற்ற கோவில்கள், நட்சத்திர ஓட்டல்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், பொழுது போக்குவதற்காக தியேட்டர்களுடன் கூடிய ஷாப்பிங் மால்கள் என புதுப்பொலிவுடனும் இளமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது.

Sunday, 21 August 2016

ஆகஸ்ட் 21: ஜீவா எனும் மானுடன் பிறந்த நாள் இன்று..
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன். பாட்டாளிகளின் தோழன். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வீரன். கலைகள் பேசிய புலவன். நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவன். எளிய மனிதன்... புனிதன்!
* ஐந்தாம் ஃபாரம் படிக்கும்போதே பாடல்கள் இயற்றும் திறமை பெற்றிருந்தார். 'காலுக்குச் செருப்புமில்லை... கால் வயித்துக் கூழுமில்லை... பாழுக்கு உழைத்தோமடா... பசையற்றுப் போனோமடா!' என்ற இவரது பாட்டுதான் தமிழகத்தின் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் செங்கொடியின் கீழ் திரளவைத்த பாட்டாளி கீதம்!
* எவ்வளவு காலம்தான் பேசிக்கொண்டே இருப்பீர்கள்? பொறுப்புகளுக்கு வர வேண்டாமா?' என்று முதலமைச்சர் பி.எஸ்.குமாரசாமி ராஜா கேட்டார். 'ஏழைகளுக்காகப் பேச வேண்டியதுதான், உழைக்க வேண்டியதுதான் சாக வேண்டியதுதான்' என்று தயக்கம் இல்லாமல் பதில் கூறி பதவிகளைத் தட்டிக் கழித்தார்!

Saturday, 20 August 2016

கேரோலினோடு போராடி தோற்கவில்லை சிந்து..
சிந்துவோடு போராடி வென்றார் கேரோலின் என்பதே சரி..

உலகின் நம்பர் 1 வீராங்கணையை தைரியமாக எதிர் கொண்டு முதல் செட்டை கைப்பற்றியதிலேயே வென்றுவிட்டார் சிந்து..

வெறும் ஒரு மெடல் வெற்றியை தீர்மானித்துவிடாது..

வெள்ளியை பெற்றாலும்  நீங்கள் இந்தியாவின் தங்கமகள் தான்..

Monday, 15 August 2016

விடுதலைக்காக வியர்வையும் கண்ணீரும் ரத்தமும் சிந்திய நம் தியாகிகளை இந்நேரத்தில் சற்று நெஞ்சில் நிறுத்துவோம்! அவர்களில் தீவிரவாதி உண்டு - மிதவாதி உண்டு - சனாதனவாதி உண்டு - சமூக சீர்திருத்தவாதியுண்டு - இந்து உண்டு - முஸ்லீம் உண்டு - கிறிஸ்துவர் உண்டு - சீக்கியர் உண்டு - இன்னும் உள்ள மதம், சாதி அனைத்திலும் உண்டு... அவர்கள் யாருடைய தியாகமும் துளியும் தன்னலமற்றது. அளப்பரியது. அந்த தியாகத்தை அசைபோட்டுக்கொண்டே இன்று நாம் எங்கே நிற்கிறோம் என்பதை ஒரு கணம் யோசித்துப் பார்ப்போம்!

எல்லோருக்கும் பெருமைக்குரிய சுதந்திர நாள் வாழ்த்துகள். பெருமையும் கொண்டாட்டமும் முழு அர்த்தத்துடன் நிலைபெறும் அக்கறையோடு சில சிந்தனைப் பகிர்வுகள்.

1947 ஆகஸ்ட் 14ஆம் நாள் இரவு 12 மணிவரை இந்தியா பிரிட்டிஷாரின் அடிமை நாடு. 15ஆம் தேதி பிறந்த நொடியில் மவுண்ட் பேட்டன் பிரபு விடுதலைப் பிரகடனத்தில் கையொப்பமிட்டார்.

 “ உலகமே உறங்கும் வேளையில் இந்தியா விழித்துக் கொண்டது,” என்று ஜவஹர்லால் நேரு நாட்டுமக்களுக்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார் .

 “வட்டமேசை மாநாடு மூலமோ அல்லது ஒரு சதுரமேசை மாநாடு மூலமோ அதிகாரம் பிரிட்டிஷார் கையிலிருந்து இந்தியர் கைக்கு மாறிவிடலாம், ஆனால் தொழிலாளி விவசாயி வாழ்வில் எந்த மாற்றமும் அதன் மூலம் ஏற்பட்டுவிடாது,” என்று சமூக அறிவியல் பார்வையோடு அன்று பகத்சிங் சொன்னது மெய்யானது . 

“இன்று அரசியல் சுதந்திரம் கிடைத்து விட்டது. ஒருவருக்கு ஒரு வாக்கு என அரசியல் சமத்துவம் வந்துவிட்டது. ஆனால் ஏற்றத் தாழ்வான நமது தேசத்தில் சமூக சமத்துவம் வெகுதொலைவிலேயே இருக்கிறது,” என கண்டுணர்ந்து எச்சரித்த அம்பேத்கரின் தீர்க்கதரிசனம் கனகச்சிதமாய் இன்றும் நம்மை உறுத்திக் கொண்டே இருக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் கூறிய ஒரு செய்தியை சுதந்திரதினச் செய்தியாய் மனதில் நிறுத்துவோம்: “இந்தியாவில் உருவ வழிபாடு மதத்திலும் அரசியலிலும் இன்றும் தொடர்கிறது. நாயக வழிபாடு பக்தரை நெறிபிறழச் செய்கிறது; நாட்டுக்கு ஆபத்தானதும் கூட. உண்மையான மாமனிதரை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இன்று பத்திரிகைகள் நினைத்தால் யாரையும் மாமனிதர் ஆக்கிவிடலாம்” என்று சுட்டிய அவர், “வீரத்தலைவர்கள் வெளியேறிவிட்டனர்; மோசடிக்காரர்கள் உள்ளே வந்துவிட்டனர்,” என்றார். ஆம். இன்று நாடு மதவெறி - பதவி வெறி - சாதி வெறி - பணவெறி - புகழ்வெறி கொண்ட மூர்க்கர்கள் கையில் சிக்கியுள்ளது.

மீட்டெடுக்க மீண்டும் மகாத்மாக்களை எதிர்பார்த்தால் ஏமாற்றமே கிட்டும். உழைப்போர் சக்தியும் மாதர், இளைஞர், மாணவர் பேராற்றலும், ஒடுக்கப்பட்டோர் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டோர் அணிவகுப்புமே மாற்றத்தின் நெம்புகோலாக உருவெடுக்கும். அந்த சமத்துவ மாற்றமே எல்லோருக்கும் சுதந்திரத்தின் மெய்ப்பொருளை உரியதாக்கும்! அந்த நாளுக்காய் விழிப்போம்! எழுவோம்! விதையாவோம்! வீரிய பயிருக்கு உரமாவோம்.

நாளை நம் சந்ததியர் சமத்துவ இந்தியாவில் வாழ்ந்திருக்க இன்று நாம் எதையும் செய்யத் தயாராவோம்!
     70வது சுதந்திர தின நல்      வாழ்த்துக்கள்.

Saturday, 13 August 2016

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 13, 1926 – கியூபாவின் நீண்டநாள் அதிபரான ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தார்.
'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும்.

காஸ்ட்ரோ ஒரு பிறவி புரட்சியாளர். அவரது புரட்சி மனப்பான்மையின் வேர், அவரது விடுதலை வேட்கையில் இருந்தது. சோவியத் யூனியனே சிதறிப் போன பிறகும், இன்று வரை க்யூபா ஒரு கம்யூனிச தேசமாக உய்ரித்திருப்பதற்கும், இந்த வினாடி வரை அமெரிக்காவால் அசைத்துப் பார்க்க முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்வதற்கும் ஒரே காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ.
Thursday, 11 August 2016

 Corporate office orders on admissibility of House Rent Allowance at IDA Basic Pay with 78.2% fitment in respect of Executives and Non-executives of BSNL. Letter No.-11-04/2015-PAT(BSNL), dt-11-08-2016. (w.e.f. 01-10-2016)